Monday 21 December 2015

புரட்சிப் பாடல்!

''ஆண்டவர் வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்:
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்:
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்'' (லூக்கா 1:52-53).


 மரியாவின் வாழ்க்கையில் கடவுள் புரிந்த அரும் செயல்கள் மரியாவின் நன்றிக் கீதத்திற்கு அடிப்படை. இப்பாடல் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்ற அன்னாவின் பாடலைப் பெரிதும் ஒத்திருக்கின்றது.


பல ஆண்டுகளாகக் குழந்தைப் பேறு இல்லாதிருந்த அன்னா கடவுளின் இரக்கத்தால் சாமுவேலைப் பெற்றதால் கடவுளுக்கு நன்றி கூறிப் பாடினார்  அதுபோல, மரியாவும் கடவுள் தமக்குப் புரிந்த அதிசய செயல்களை எண்ணி, கடவுளைப் போற்றுகின்றார்.

 இப்பாடலில் ஒரு தனித்தன்மை உண்டு. அதாவது உலகம் பெரிதாக மதிப்பதைக் கடவுள் பெரிதாகக் கருதுவதில்லை. மாறாக, உலகம் மதிப்பதற்றதாகக் கருதுவது கடவுளின் பார்வையில் மாண்புடைத்ததாகிறது. இது ''மனித மதிப்பீடுகளைப் புரட்டிப் போடுதல்'' என்னும் இலக்கிய மற்றும் இறையியல் உத்தி.


 மரியா பாலஸ்தீன நாட்டில் பிறந்த ஓர் ஏழைப் பெண். அவருக்கு சமுதாயத்தில் பெண் என்ற முறையில் மதிப்பு இருக்கவில்லை. அவர் பெரிய பதவியோ அதிகாரமோ கொண்டிருக்கவில்லை. ஆனால் கடவுள் அவரைத் தேர்ந்தெடுத்து தம் மகனின் தாயாக மாறுகின்ற பெரும் பேற்றினை அளித்தார்.

பசியால் வாடிய இஸ்ரயேலருக்குக் கடவுள் வானிலிருந்து இறங்கிய உணவை வழங்கினார்; அவர்களுடைய தாகத்தைப் போக்க அதிசயமான விதத்தில் நீரூற்று தோன்றியெழச் செய்தார். அதே நேரத்தில் தங்களுக்கு எல்லாம் இருக்கிறது என இறுமாப்புக் கொண்டு மமதையால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்களைக் கடவுள் முறியடித்தார்.

 இதற்கும் விவிலியம் பல எடுத்துக்காட்டுகள் தருகிறது. நன்மைக்கும் தீமைக்கும் இவ்வுலகிலேயே பலன் கிடைத்துவிடும் என நாம் கூற முடியாது. என்றாலும், கடவுள் நேர்மையுள்ள நடுவர் என்பதால் அவர் மனிதரின் உள்ளத்தைத்தான் பார்க்கிறார். வெளித்தோற்றத்தைக் கண்டு ஏமாறுபவர் அல்ல அவர்.

எனவே, செல்வம் தங்களுக்கு இருக்கிறது என நினைத்துக்கொண்டு ஏழைகளை மதியாதவர்கள் கடவுளிடமிருந்தும் மதிப்பு எதிர்பார்க்க முடியாது. மரியாவின் பாடல் நமக்க உணர்த்தும் அரிய உண்மை என்னவென்றார்:

நாம் மரியாவைப் போலக் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுதில் நிலைத்திருந்தால் கடவுள் நமக்கு நிறைவான மகிழ்ச்சியைத் தருவார். அது இவ்வுலகிலேயே தொடங்கி மறுவுலகில் முழுமைபெறும்.



பாடல்கள் மனிதனின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த மொழி நடை. எத்தனை மொழிகளில் என்னென்ன கவி நயத்துடன் பாடல்களை வடிவமைத்தாலும்,உலக வரலாற்றல் ஒரே ஒரு பாடல் மட்டும்தான் எல்லோராலும் எல்லா காலத்திலும் பாராட்டப்படுகிறது, பாடப்படுகிறது. அது நம் அன்னை மரியாளின் பாடல்.

இப்பாடலை எல்லா வயதினரும் பாடலாம். எல்லா சூழ்நிலையிலும் பாடலாம். இன்பத்திலும் பாடலாம். துன்பத்திலும் பாடலாம். வெற்றியிலும் பாடலாம். தோல்வியிலும் பாடலாம். உயர்விலும் பாடலாம். தாழ்விலும் பாடலாம். ஆயினும் இப் பாடலின் முழுமையை, நிறைவை ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்தவர்கள் மட்டுமே அனுபவிக்க முடியும்.

அன்னை மரியாளிடமிருந்த அதே மனநிலை உள்ளவர்கள் மட்டுமே இப்பாடலின் சிறப்பைப் பெற முடியும். ஆண்டவரில் உள்ளம் மகிழ வேண்டும். "நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்ற இறை திட்டத்திற்கு கீழ்ப்படிதலும் அர்ப்பணமும் தேவை. ஏழைக்கு இரங்கும் உள்ளம், உதவும் மனம்,தாழ்ச்சி நிறைந்த செயல்பாடு இவை இப் பாடலைப் பாட வலுவூட்டும்.

எந்தச் சமுதாயத்தில் இப்பாடலைப் பாடும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ளதோ, அந்த சமுகம் ஏற்றத்தாழ்வின்றி செழிக்கும். யாருடைய குடும்பங்கள் இந்த மனநிலையில் உருவாகுகிறதோ, அக்குடும்பங்கள் குறைவின்றி வாழும்.

No comments:

Post a Comment