Tuesday 15 December 2015

நேரடி அனுபவம்!

''அந்நேரத்தில் பிணிகளையும் நோய்களையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரை
இயேசு குணமாக்கினார்; பார்வையற்ற பலருக்குப் பார்வை அருளினார். அதற்கு அவர் மறுமொழியாக,
'நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்' என்றார்'' (லூக்கா 7:21-22)


திருமுழுக்கு யோவானும் இயேசுவும் உறவினர்கள். அவர்கள் இருவருமே மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆயினும் அவர்கள் கடவுளாட்சியின் வருகையை அறிவித்த பாணி வேறுபட்டது.


 மக்கள் மனம் மாறாவிட்டால் கடவுளின் தண்டனைக்கு உள்ளாவர் என்று கடுமையான சொற்களைப் பயன்படுத்தினார் யோவான். இயேசுவோ கடவுளாட்சி என்பது கடவுளின் இரக்கமும் அன்பும் வெளிப்படுகின்ற தருணம் என போதித்தார்.


இயேசு கடவுளின் அன்பை எவ்வாறு வெளிப்படுத்தினார்? மக்களுக்கு நலம் கொணர்ந்து கடவுள் அவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளார் என்பதை இயேசு காண்பித்தார். எனவேதான் அவர் ''பிணிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரைக் குணமாக்கினார்'' (லூக் 7:21). இவ்வாறு இயேசு மக்களுக்கு நலமளித்ததை யோவானின் சீடர்கள் பார்க்கிறார்கள். இயேசுவின் சொற்களைக் கேட்கிறார்கள்.


 இவ்வாறு நேரடியான அனுபவம் பெற்றதால் அவர்கள் தங்கள் குருவாகிய யோவானிடம் சென்று தங்கள் அனுபவத்தை அவரோடு பகிர்ந்துகொள்வார்கள். யோவானும் இயேசு எத்தகைய மெசியா என்பதை அறிந்துகொள்வார். இயேசுவைத் ''தயக்கமின்றி ஏற்றுக்கொள்வார்'' (லூக் 7:23).


 இயேசுவை நாம் அறிய வேண்டும் என்றால் அவர் நமக்கு அறிவிக்கின்ற செய்திக்கு நாம் கவனத்தோடு செவிமடுக்க வேண்டும். அவர் புரிகின்ற செயல்களை நம் கண்கள் திறந்து பார்க்க வேண்டும். அதாவது, இயேசுவை அணுகிச் சென்று அவரை நேரடி அனுபவத்தால் அறிகின்றவர்களே அவருடைய உண்மையான பண்பைத் தெரிந்துகொள்ள முடியும்.


இத்தகைய நேரடி அனுபவம் நமக்கு இல்லையென்றால் இயேசு பற்றிய அறிவு வெறும் ஏட்டுச் சுரக்காயாகவே இருந்துவிடும். அதனால் நமக்கும் பிறருக்கும் பயனில்லாது போய்விடும். இயேசு கடவுளின் அன்பை மக்களோடு பகிர்ந்துகொள்வதற்குத் தெரிந்துகொண்ட வழி அவர்களுடைய பிணிகளைப் போக்கி அவர்களைத் தீய ஆவிகளின் பிடியிலிருந்து விடுவித்ததுதான்.


இன்றைய உலகிலும் பலவகையான பிணிகளால் அவதியுறுகின்ற மனிதர்கள் இருக்கின்றார்கள். தன்னலம், பேராசை, அதிகார வேட்கை போன்ற ''தீய ஆவிகள்'' நம்மைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கின்றன.


இத்தகைய பிணிகளிலிருந்தும் ''தீய ஆவிகளிடமிருந்தும்'' நாம் விடுதலை பெற வேண்டும் என்றால் இயேசுவை அணுகிச் செல்ல வேண்டும்; நம் வாழ்வில் ஆழ்ந்த மாற்றம் கொணர்கின்ற அவரது வல்லமையைப் பணிவோடு நாம் ஏற்றிட வேண்டும்.


No comments:

Post a Comment