Thursday 3 December 2015

கண்கள் திறக்கும்...!பார்வை பெறுவோம்...!

இயேசு பார்வையற்றோரின் கண்களைத் தொட்டு,
'நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்' என்றார்.
உடனே அவர்களின் கண்கள் திறந்தன'' (மத்தேயு 9:29-30).

இயேசுவை அணுகிச் சென்று அவருடைய உதவியை நாடியவர்கள் பலர். இவ்வாறு தம்மைத் தேடிவந்த மனிதரை இயேசு அன்போடு வரவேற்றார். அவர்களுடைய துன்பங்களைப் போக்குவதற்கு இயேசு முன்வந்தார். இயேசுவிடத்தில் கடவுளின் சக்தி துலங்கியதை அவர்கள் கண்டுகொண்டனர். என்றாலும், இயேசு தம்மை அணுகிவந்த மனிதரிடம் ஒரு முக்கியமான பண்பை எதிர்பார்த்தார். அப்பண்புதான் ''நம்பிக்கை'' என அழைக்கப்படுகிறது.

 இந்த நம்பிக்கையில் இரு அம்சங்களை நாம் காணலாம். நாளைய நற்செய்தியில் நாம் காண்பது இதுவே...,

1. இயேசுவை அணுகி உதவி தேடியவர்கள் அவர் நினைத்தால் தங்களுடைய துன்பத்திலிருந்து விடுதலை தர முடியும் என உறுதியாக ஏற்றுக்கொண்டார்கள்.
2. அவர்கள் இயேசுவின் வழியாகக் கடவுளே அதிசய செயல்களை ஆற்றினார் என்னும் உறுதிகொண்டிருந்தனர்.

இவ்வாறு உறுதியான உள்ளத்தோடும் ஆழ்ந்த எதிர்பார்ப்போடும் இயேசுவை அணுகிச் சென்றவர்கள் ஒருபோதுமே ஏமாற்றமடையவில்லை. நம் வாழ்விலும் இது நிகழ்வதை நாம் காணலாம். நம் உள்ளத்தில் உறுதி இருக்கும்போது நடக்கவியலாது என நாம் நினைப்பதும் நடப்பதுண்டு.

 நம் உள்ளத்தில் உறுதியற்ற நிலை தோன்றிவிட்டால் நாம் வெற்றியடைய இயலாது என்னும் எதிர்மறை எண்ணம் நம்மில் வேரூன்றி, நம் உறுதிப்பாட்டைக் குலைத்துவிடும். அந்த வேளைகளில் நம் முயற்சி வெற்றிதராமல் போய்விடுவதுண்டு. இது மனித வாழ்வில் நாம் பெறும் அனுபவம்.

 ஆனால், கடவுளை அணுகிச் செல்வோர் கடவுளின் கைகளில் தங்களையே முழுமையாகக் கொடுத்துவிடுவதால் வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். தமக்கு வெற்றியாகத் தோன்றுவது உண்மையில் தோல்வியாகவும், தோல்வியாகத் தோன்றுவது உண்மையில் வெற்றியாகவும் மாறிடக் கூடும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

 எனவே, கடவுள்மீது நம்பிக்கை கொள்வோர் தம் சொந்த சக்தியில் நம்பிக்கை கொள்ளாமல் தம் வாழ்வினையே கடவுளிடம் தந்துவிட்டு, கடவுள் தம்மிடம் எதிர்பார்ப்பதைச் செய்வதில் முனைந்துநிற்பார்கள்.


இயேசுவை அணுகிச் சென்று பார்வை பெற விரும்பிய பார்வையற்றோருக்கு இயேசுவிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கை இருந்ததுபோல நாமும் நம்பிக்கையோடு அவரை நாடிச் சென்றால் நம் ''கண்கள் திறக்கும்''. அப்போது நாம் உண்மையிலேயே ''பார்வை பெறுவோம்.'' கடவுளே நமக்கு ஒளியாயிருந்து நம்மைக் கைபிடித்து வழிநடத்திச் செல்வார்.


1 comment:

  1. Total Faith In God always bring joy in life. thank you dear kalai for the reminder. GOOD EFFORT

    ReplyDelete