Friday 13 November 2015

நாம் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள்!

''இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால்
நான் இவருக்கு நீதி வழங்குவேன்'' (லூக்கா 18:5)



இறைவேண்டலின் தேவை பற்றி இயேசு கூறிய உவமைகளில் ஒன்று ''நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்'' பற்றியதாகும் (காண்க: லூக்கா 18:1-8). லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்ற இந்த உவமையில் வருகின்ற கைம்பெண் நீதி கேட்டு நடுவரிடம் மீண்டும் மீண்டும் செல்கிறார்.

 நடுவரோ அக்கைம்பெண்ணைப் பற்றி எள்ளளவும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அக்காலத்தில் கைம்பெண்களுக்கு எந்த ஒரு ஆதரவும் இருக்கவில்லை. கடவுளுக்கும் அஞ்சாமல், மனிதரையும் மதிக்காமல் நடக்கின்ற நடுவர் அக்கைம்பெண்ணின் வேண்டுகோளைக் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கின்றார். ஆனால் அப்பெண் எளிதில் விடுவதாக இல்லை.

நடுவரை அணுகிச் சென்று எப்படியாவது தனக்கு நீதி வழங்கவேண்டும் என்று வற்புறுத்திக் கேட்கிறார். தொல்லை பொறுக்கமுடியாமல், இறுதியில் நடுவரின் மனமும் இளகுகிறது. அப்பெண் கேட்டவாறே அவருக்கு நீதி வழங்குகிறார் நடுவர்.

இயேசு இந்த உவமையைக் கூறிய பிறகு, கடவுளை நோக்கி நாம் வேண்டுவது எத்துணை இன்றியமையாதது என விளக்குகிறார். மீண்டும் மீண்டும் கடவுளை நாம் அணுகிச் செல்லும்போது கடவுள் நமக்குத் ''துணைசெய்யக் காலம் தாழ்த்தமாட்டார்'' (காண்க: லூக்கா 18:7). இவ்வுளவு உறுதியான உள்ளத்தோடு நாம் கடவுளை அணுகுகிறோமா? சில வேளைகளில் நம் உள்ளத்தில் உறுதி இருப்பதில்லை.

கடவுள் நம் மன்றாட்டைக் கேட்பாரோ மாட்டாரோ என்னும் ஐயமும் நம் உள்ளத்தில் எங்காவது எழும். அல்லது நம் மன்றாட்டு முறையானதாக இல்லாததால்தான் கடவுள் நாம் கேட்பதை நமக்குத் தரவில்லை என நாம் தவறாக முடிவுசெய்திடக் கூடும். ஆழ்ந்த நம்பிக்கையோடு நாம் கடவுளை அணுகிச் செல்ல வேண்டும் என்பதை மட்டும் இயேசு வலியுறுத்துகிறார்.

நாம் கேட்டது கிடைக்காவிட்டாலும் கடவுளிடம் நமக்குள்ள நம்பிக்கை ஆழப்படுவதே நம் வேண்டுதலுக்குக் கிடைக்கின்ற பெரிய பயனாகும் எனலாம். ஆகவேதான் இயேசு மனிதரிடம் கடவுள் நம்பிக்கை நிலைத்திருக்குமா என்றொரு கேள்வியோடு இந்த உவமையை முடிக்கின்றார் (லூக்கா 18:8). நாம் கடவுளிடத்தில் கொள்கின்ற நம்பிக்கை ஒருநாளும் குறைபடாமல் இருக்க வேண்டும் என்பதுதான் இறைவேண்டலின் இறுதிப் பொருள்.

"தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?" (லூக் 18'7)

விவிலியத்தை வாசிக்கும்போது நம் இறைவன் தேர்ந்துகொண்டவர்கள் யார் யார் என்பதை தெறிய வருகிறோம். ஏழைகள், சிறியோர், பின் தங்கியோர், யாருமற்றோர்,வஞ்சிக்கப்பட்டோர், பாவிகள், கடவுளைச் சார்ந்திருப்போர் இவர்கள் இறைவன் தேர்ந்துகொண்டோர் ஆவர்.

இவர்கள் தங்கள் இறைவனை நோக்கிக் குரல் எழுப்பும்போதெல்லாம் அந்த இறைவன் அவர்கள் குரலுக்கு குரல் கொடுப்பார்,நீதி வழங்குவார்,துணை செய்வார்.

"நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது"(தொ.நூ 4'10) ஆபேலின் சிந்திய இரத்தத்தின் கூக்குரலுக்கு அவரின் பதில்.

"எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன்".(வி.ப 3'7) இஸ்ராயேல் மக்களின் கூக்குரலுக்கு இறைவனின் பதில்.

"நீ கூக்குரல் இடுவாய்; அவர் "இதோ! நான்" என மறுமொழி தருவார்" ( ஏசா 58'9)

நீ செபிக்கும்போது செவி சாய்க்காமல் பாராமுகமாய் இருப்பவர் அல்ல. கடவுளுக்கும் மனிதனுக்கும் பயப்படாத மனிதனே நீதி வழங்கும்போது, காருண்ய தேவன் கருணை காட்டாதிருப்பாரோ!

ஆக,நாம் (அருள்நிலை மற்றும் பொதுநிலை ) எல்லோரும்  கடவுளால்  தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதனை மனதில் கொண்டு கடவுளுக்காய் வாழ்வோம்!  

No comments:

Post a Comment