Monday 9 November 2015

வாழ்தலில் இருக்கிறது வாழ்க்கை

பிழைப்பு வேறு வாழ்வு வேறு என்கிறார் கே. என் பணிக்கர். பிறப்பது சாப்பிடுவது, வளர்வது, கல்யாணம் பண்ணிக் கொள்வது, பிள்ளைகள் பெற்றுக் கொள்வது அவர்களை வளர்ப்பது, அவர்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்பது, பேரப்பிள்ளைகள் எடுப்பது, வயசாவது, செத்துப்போவது இதற்குப் பெயர் பிழைப்பு. இந்தப் பிழைப்பை மனிதர்கள் மட்டுமா பிழைக்கிறார்கள். 

ஆடு, மாடு, கோழி, பன்றி ,பாம்பு, பல்லி, பூரான் என்று அனனத்து ஜீவராசிகளும் பிழைக்கின்றன. இதற்கு மாறாக வாழ்கிற காலத்தில் அடுத்தவர்களுக்காக உழைப்பதற்கு பெயர் தான் வாழ்வு. இந்த வாழ்வை மனிதர்கள் எல்லோரும் வாழ வேண்டும். இல்லையேல் வாழ்தலுக்கான எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும் .


          ஒவ்வொரு மனிதருக்கும் மூன்று வாழ்க்கை இருக்கின்றன. அவை குடும்ப வாழ்க்கை, பணி வாழ்க்கை, சமூக வாழ்க்கை. கூடவோ கொறைச்சலோ குடும்ப வாழ்க்கையை எல்லோரும் வாழ்கிறோம். பணி வாழ்க்கையும் நடக்கிறது. ஆனால் சமூக வாழ்க்கையை நிறைய பேர் வாழ்வதில்லை. 

ஏனெனில் அது நமக்கு சம்மந்தமில்லாதது என்று புறக்கணித்து விடுகிறோம். 1947-இல் இந்தியா பெற்ற சுதந்தத்திற்கு இப்போது 67-ஆவது வயது நடக்கிறது. எத்தனையோ தேர்தல்களும் எண்ணற்ற திட்டங்களும்  வந்து போன பிறகும் அடிப்படை வசதிகள் கூட அனைவருக்கும் கிடைப்பதில்லை. 

உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்! இன்றைய நிலவரப்படி இந்தியர்களில் 1 சதவீதம் பேர்  புதிய பணக்காரர்கள் ,  4 சதவீதம் பேர் பெரிய பணக்காரரர்கள், 10 சதவீதம் பணக்காரரர்கள், 15 சதவீதம் நடுத்தர மக்கள், 25 சதவீதம் ஏழைகள்,45 சதவீதம் பரமஏழைகள். இந்த நிலைமை மாற வேண்டுமானால் நாம் சமூக வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  

“மனத்திருப்தி இயற்கையாக கிடைத்த செல்வம், ஆடம்பரம் செயற்கையாக  உருவாக்கிக் கொண்ட பஞ்சம்” என்றார்  சாக்ரட்டீஸ்.   உலக மையமும், தாராளமயமும் ஆடம்பரத்தை நோக்கி மக்களை தலைத் தெறிக்க ஓடவைத்துக் கொண்டிருக்கிறது. 

வசதி மேலும் வசதி என்று ஓய்வின்றி உழைத்து உழைத்து வசதிப்பிணி என்ற நோய் தாக்கி மக்கள் அவதிப்படுகிறார்களாம். தேவைகளை அளவாகவும் வாழும் முறையை எளிமையாகவும் வைத்துக் கொண்டால் வாழ்க்கை நிச்சயம் இனிக்கும். 

மாறாக, ஆடம்பரத்தை தேடி ஓடினால் வாழ்க்கை கட்டாயம் கசக்கும். விவிலியம் சொல்வதைப் போல், அடிப்படை வசதிக்கு மேல் ஆசைப்படுகிறவர்கள் காலம் முழுவதும் அலைந்து கொண்டேயிருப்பார்கள் .
          
எல்லாக் குழந்தைகளும் மகப்பேறு மருத்துவமனைகளில் கிளித்தெடுக்கப்பட்டு  தொலைக்காட்ச்சிப் பெட்டிகளில் பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கல்யாண்ஜி கவிதை எழுதினார். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்கள், முதியவர்கள் அனைவரும் இப்படித்தான் இருக்கிறார்கள். தொலைக்காட்சிப்  பெட்டிகள், மக்களை அதன் ஆளுகைக்குள் சுண்டி இழுத்துக் கொண்டிருக்கின்றன. 

அவை இடைவிடாது உமிழ்ந்து கொண்டிருக்கும் விளம்பரங்கள், வர்த்தகப் பொருட்களிடம்  வெகுமக்களை  விற்பனை செய்து கொண்டிருக்கின்றன. நடைமுறை வாழ்க்கைக்கு தேவையற்ற பொருட்களை வாங்கி வாங்கி குவிக்கச் சொல்லி சாதாரண மக்களையும் வற்புறுத்துகின்றன. 

எதையும் சீர்தூக்கிப் பார்க்காமல் ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தை உற்பத்தி செய்துகொண்டேயிருக்கின்றன. வேறு எவரைப் பற்றியும் கவலைப் படாதே, உன்னை பட்டும் பார்த்துக் கொண்டால் போதும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டேயிருக்கின்றன. 

அதன் நிகழ்ச்சிகள் வன்முறையையும், வர்ண்ண ஜாலங்களையும் பாலியல் வக்கிரங்களையும் இயல்பான ஒன்றாக காட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி, சிறந்த நிகழ்ச்சிகளைத் தேர்வு சிந்தித்து  பார்க்க பழகிக் கொள்வதுதான்.

          வன்முறைகளின் வெற்றி பெண்களின் உடல் மீது எழுதப்படுகிறது என்கிறார்கள். ஆம்! அதிகாரம் தன்னை எழுதிப்பார்த்திடும் விரிந்த புத்தகமாக இன்றும் பெண் உடலே இருந்துக்கொண்டிருக்கின்றது."பெண்களின் நிலை  பரிதாகமாக உள்ளது; தலித் பெண்களின் நிலை அவமானமாக உள்ளது" என்று முன்னாள் குடியரசுச் தலைவர் கே.ஆர்.நாராயணன் ஒரு முறைச் சொன்னார். 

பெண்களை நாம் சமமாக நடத்த வேண்டும். குடும்பத்தில் ஜனநாயகத்தை கடைபிடிக்க வேண்டும். அதுதான் நாம் நாகரீகமடைந்ததன் அடையாளம். இந்தியாவின் அவமானங்களில் ஒன்றான "தீண்டாமை" இன்னும் நீடிக்கிறது. மனிதனை மனிதன் இழிவு செய்யும் இக்கொடுமையை முற்றாக  ஒழிக்க நாம் பாடுபட வேண்டும்.

          கருணை என்பது கனிவான வார்த்தை. கனிவான வார்த்தைகளைச் கற்றுக் கொள்ள வேண்டும். பேசக் கற்றுக்கொள்ள இரண்டாண்டுகள் போதும்; எதைப் பேசக் கூடாது என்பதை கற்றுக் கொள்ள வாழ்நாள் முழுவதும் தேவைப்படுகிறதாம். 

எதைப் பேசக்கூடாது என்பதை கற்றுக் கொண்டவர்கள் அன்பை விதைப்பார்கள். இணக்கத்தை ஏற்ப்படுத்துவார்கள். தன்னுடய வளர்ச்சியில்  மட்டும் கவனமாய் இருப்பவர்கள் விழிப்புணர்வு பெற்றவர்கள் என்று பலர் கருதுகிறார்கள். அது சரியல்ல. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்று நினைப்பவர்களும் அதற்காக உழைப்பவர்களும் தான் உண்மையிலேயே  விழிப்புணர்வு  பெற்றவர்கள்.   
  

           இவற்றை எல்லாம்  கடைபிடித்து  வாழ்தலில்  இருக்கிறது   வாழ்க்கை.

1 comment:

  1. Yes, the true joy is tasted only in living for others, serving for others and finding in fulfilling others dreams. Good sharing kalai.

    ReplyDelete