Tuesday 3 November 2015

கோபுரம்

''உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும்
என் சீடராய் இருக்க முடியாது'' (லூக்கா 14:33).

நாளைய  நற்செய்தியில் கோபுரம் என்று, இயேசு சொல்வது திராட்சைத் தோட்டத்தில் பாதுகாப்பிற்காக அமைக்கப்படும் கோபுரமாக இருக்கலாம். பொதுவாக, பாலஸ்தீனப்பகுதிகளில் திராட்சைத் தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக, உயர்ந்த கோபுரங்களை அமைப்பர். 

அந்த கோபுரம் தங்குமிடமாகவும், திருடர்களிடமிருந்து தோட்டத்தைப் பாதுகாப்பதற்கு வசதியாகவும் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு கோபுரத்தைக் கட்டி முடிக்காமல், இடையில் விட்டுவிடுவது, ஒருவருக்கு அவமானத்தை தருவிக்கக்கூடியது. அதே போல, இயேசுவைப் பின்தொடர்ந்து விட்டு, இடையில் செல்வது, நமக்கு மிகப்பெரிய அவமானம். இயேசுவைப் பின்தொடர்வதற்கு முன்னால், நமது பலவீனங்கள், பலம் அவற்றைக் கருத்தில்கொண்டு, நம்மையே தயார்நிலையில் உட்படுத்தி, அவரை பின்பற்ற வேண்டும். ஆனால், இயேசுவைப் பின்பற்ற ஆரம்பித்தபிறகு, எக்காரணத்தைக் கொண்டும், அதனால் ஏற்படும் சவால்களைக் கண்டு பயந்து ஓடக்கூடாது.

இயேசு ஏன் தன்னை முழுமையாகப் பின்பற்ற நம்மைக் கேட்கிறார்? முழுவதுமாக இயேசுவைப் பின்பற்றுவது எளிதான காரியமா? சவால்களை எதிர்கொள்வது கடினமானது அல்லவா, அப்படியிருக்கிறபோது, அது நம்மால் முடியக்கூடிய காரியமா? என்றெல்லாம் நமக்குள்ளாக கேள்விகள் எழும். ஆனால், மனம் இருந்தால் போதும்.

இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும். அவர் நம்மை வழிநடத்துவார் என்பது நாம் பெறக்கூடிய ஆறுதல் செய்தி. இயேசு நான் பின்பற்ற வேண்டும், பின்பற்றுவேன் என்ற உறுதி இருந்தால் போதும், அந்த உறுதி, நம்மை வழிநடத்தும். 

நீச்சல் பழக வேண்டும் என்று ஆசைப்படுகிறவர், தன்னால் நீந்த முடியும், என்று மனதளவில் உறுதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவரால் முழுமையாக நீந்த முடியும். அதேபோலத்தான் நமது சீடத்துவ வாழ்வும்.

நமது தனிப்பட்ட வாழ்க்கையில் இயேசுவைப் பின்பற்ற வேண்டும், என்ற ஆசை இருக்கிறதா? அவரை என்னால் பின்பற்ற முடியும், என்ற உறுதி இருக்கிறதா? அப்படிப்பட்ட உறுதி இருக்கிறபோது, கடவுள் என்னை வழிநடத்துவார் என்கிற, விசுவாசம் இருக்கிறதா? சிந்திப்போம். இயேசுவை முழுமையாக, உண்மையாக பின்பற்றுவோம். 

கிறிஸ்தவன் என்பவன் கூட்டத்தோடு ஒருவன் அல்ல. கும்பலில் ஒருவன் என்பது கிறிஸ்தவத்துக்கு ஒவ்வாத ஒன்று. ஒவ்வொருவரும் முக்கியம். ஒவ்;வொருவரின் பங்கும் செயல்பாடும் அவசியமானது. நான் பெரியவன், நீ சிறியவன் என்பது கிறிஸ்தவத்தில் இல்லை. எல்லோரும் திருச்சபை என்னும் மறையுடலில் முக்கியம்.வாசியுங்கள்1 கொரி 12'12-30.

இத்தனை சிறப்பு மிக்க பங்கேற்பில் நாம் கூட்டத்தோடு கூட்டமாக, கும்பலில் ஒருவனாக, பத்தோடு பதினொன்றாக இருக்கக் கூடாது, இருக்க முடியாது என்பது இயேசுவின் திட்டவட்டமான கொள்கை. திருவிழா கிறிஸ்தவனாக இருப்பதை அவர் ஏற்கவில்லை. வரி வழி கிறிஸ்தவமும் இயேசுவுடையதல்ல. பரம்பரை கிறிஸ்தவமும் அவரது எதிர்பார்ப்பல்ல. "தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது"(லூக் 14'27)..
உன்னுடைய பங்கேற்பும் பொறுப்பும் கடமையும் நிறைய உண்டு. ஆகவே, கோபுரம் கட்ட விரும்புவன் போல, முதலில் உட்கார்ந்து,அதற்கான தகுதி உன்னிடம் இருக்கிறதா எனப் பார்க்கவேண்டும். இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்ப்பவன்போல சிந்திக்க வேண்டும்.

இச்சிந்தனை உன்னில் ஒரு செயல்படும் தாக்கத்தை ஏற்படுத்தும். உன் சிலுவையைச் சுமந்துகொண்டு இயேசுவைப் பின்செல்க நீ தயாராகிவிடுவாய். நீ இப்பொழுது இயேசு எதிர்பார்க்கும் உண்மைச் சீடன்.

ஆகையால்,  நம் வாழ்வென்னும் கோபுரத்தை தகுந்த  முறையில் கட்டியெழுப்ப இறைவார்த்தைகளால் அடித்தளமிடுவோம். கோபுரத்தை தூய்மையாகவும் வைத்திருப்போம். 



1 comment:

  1. Really it was very good thought for our vocation life.

    ReplyDelete