Thursday 26 November 2015

அகமகிழ்வோம்!

''அத்திமரம்...தளிர்விடும்போது அதைப் பார்க்கும் நீங்களே
கோடைக்காலம் நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள்'' (லூக்கா 21:29-30).



இயேசு மக்களுக்கு இறையாட்சி பற்றி அறிவித்தபோது பல உவமைகளைப் பயன்படுத்தினார். அந்த உவமைகள் பெரும்பாலும் இயற்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இயேசு வாழ்ந்த பாலஸ்தீனப் பகுதியில் அத்திமரம் பரவலாக வளரும். அத்திமரம் (பிற மரங்களைப் போல) வசந்த காலத்தில் தளிர்விடும்.

குளிர்காலம் தாண்டிய பிறகு மரங்களில் பசுமையான தளிர் தோன்றுவது மக்கள் உள்ளத்தில் நம்பிக்கையைத் தூண்டும் இயல்புடையது. வசந்த காலம் தொடங்கிவிட்டால் கூடிய விரைவில் கோடைக்காலமும் வந்துவிடும். இதைத் தம் அனுபவத்தில் உணர்ந்த இயேசு ஒரு சிறு உவமை வழியாக அரியதோர் உண்மையைப் புகட்டுகிறார். அதாவது, அத்திமரம் வசந்த காலத்தில் தளிர்விடும்போது கோடைக்காலம் அடுத்துவருகிறது என மக்கள் முடிவுசெய்வதுபோல, இயேசு அறிவித்த அழிவுகள் நிகழும்போது இறுதிக்காலம் நெருங்கிவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

எருசலேமின் அழிவு கி.பி. 70இல் நிகழ்ந்தபோது அதுவே இறுதிக்காலத்தின் தொடக்கம்போல, இறுதிக்காலத்தை முன்னறிவிப்பதுபோல அக்காலத் தலைமுறையினருக்கு அமைந்தது.


 ஆனால் இயேசு அறிவித்த செய்தி அழிவு பற்றியது மட்டுமல்ல. அழிவு ஏற்படப்போகிறது என்பதை முன்னுணர்ந்து, அதற்குத் தங்களையே தயாரித்துக்கொள்ள வேண்டும் என்றும், நம்பிக்கையோடு நிலைத்திருந்தால் ''வாழ்வைக் காத்துக்கொள்ள முடியும்'' (காண்க: லூக் 21:19) என்றும் இயேசு உணர்த்தினார்.


இயேசு அறிவித்த இறுதிக்காலம் அவருடைய வாழ்வு, சாவு, உயிர்த்தெழுதல் என்னும் நிகழ்வுகள் வழியாக ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அந்த இறுதிக்காலத்தின் நிறைவு ஒருநாள் வரும் என்பது நம் நம்பிக்கை. இந்நம்பிக்கை நம் வாழ்வுக்கு ஓர் உந்துதலாக அமைய வேண்டும்.


அப்போது அழிவு பற்றிய செய்தி நம்மைத் துயரத்தில் ஆழ்த்துவதற்கு மாறாக, நம் உள்ளத்தில் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும். ஏனென்றால் கடவுள் முன்வகுத்த திட்டம் நிறைவேறுவதோடு நம் வாழ்வின் நிறைவும் நிகழும் நேரம் வந்துவிட்டதை அறிந்து நாம் அகமகிழ்வோம்.


No comments:

Post a Comment