Sunday 8 November 2015

உடல் எனும் ஆலயம்

''இயேசு கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்; 
அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்'' (யோவான் 2:14-15).


லாத்தரன் பேராலய அர்ப்பணிப்பு நாளாகிய நாளை  இயேசு எருசலேம் தேவாலயத்தைத் தூய்மைப்படுத்திய நிகழ்வை நற்செய்தியாக வாசிக்கிறோம். அந்த நிகழ்வின் இறுதியில் நற்செய்தியாளரின் விளக்கவுரையில் இயேசு தம் உடலாகிய ஆலயத்தைப்  பற்றியே பேசினார் என்று குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

நாளைய  சிந்தனைக்கு அந்த வரியையே எடுத்துக்கொள்ளலாம். ஆலயம்  என்பது இறைவன் வாழும் இல்லம். மனிதர் கட்டிய ஆலயத்தில்  வாழ்கின்ற இறைவன், தாமே கட்டிய ஆலயமாகிய  மானிட உடல்களிலும் வாழ்கிறார். இயேசுவின் உடல் இறைவனின் புனித ஆலயம்  என்பதால், அவரைத் தலையாகக் கொண்ட உடலாகிய நம் அனைவரின் உடல்களும் இறைவனின் தூய  ஆலயங்கல்தானே . 

பவுலடியாரும் நாம் தூய ஆவியின் ஆலயங்கள்  என்று குறிப்பிடுகிறாரே. எனவே, நம்மை, நம் உடல்களை இறைவனின் ஆலயங்கள்  என்ற மதிப்பீட்டில் வளர்வோம். 

நம்மைப் போன்ற மனிதர்கள் ஒவ்வொருவருமே இறைவன் வாழும் ஆலயங்கள்  என்பதையும் மறக்காமல், ஒவ்வொருவருக்கும் உரிய மாண்பை, மதிப்பை வழங்க முன் வருவோம். உடலுக்கெதிரான தீமைகள், குற்றங்கள் குறிப்பாக வன்முறை இறைவனுக்கெதிரானது என்பதை மனதில் கொள்வோம்.

 அடிப்பது என்பது மனித உரிமை மீறல், இறைவனின் ஆலயத்திற்கு  எதிரான பாவம் என்பதை உணர்ந்தால், ஆசிரியர்-மாணவர், கணவன்-மனைவி, பணித்தலைவர்-ஊழியர், மற்றும் அண்டை அயலாருக்கிடையே உள்ள உறவில் வன்முறை, அடித்தல், காயப்படுத்துதல் போன்றவை நிச்சயமாக நீங்கிவிடும்.

இங்கே பயன்படுத்தப்படும் "ஆலயம் " என்ற வார்த்தை நான்கு வித பொருள் கொடுப்பதைக் காண்கிறோம்.

1. எருசலேம் தேவாலயம்பற்றியது.
2.இயேசு தன் உடலை ஆலயம் எனக் குறிப்பிடுவது.
3.திருச்சபை கிறிஸ்துவின் மறையுடல்.
4.நம் ஒவ்வொருவரின் உடலும் தூய ஆவியின் ஆலயம்.

இந்த நான்கும் தந்தை இறைவனின் இல்லங்கள். இவற்றை சந்தையாக்குவதை மகனால் ஏற்றுக்கொள்ள முடியாது. "உமது இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்" என்ற மறை நூல் வாக்கு உண்மையாகிறது. எனவே சாட்டை பின்னி, எல்லோரையும் துரத்துகிறார். காசுகளைக் கொட்டி மேசைகளை கவிழ்த்துப்போட்டார்.

இந்த ஆலயங்களை நாம் எவ்வாறெல்லாம் சந்தையாக்குகிறோம். நம் ஆலயங்களைப் பயன்படுத்தாதபோதும் தவறாக பயன்படுத்தும்போதும்; நற்கருணை அருட்சாதனத்தில், திருப்பலியில் பங்குகொண்டு அவரை மகிமைப்படுத்தாதபோதும்,அவசங்கைகள் செய்கின்றபோதும்; திருச்சபைக்கும் திருத்தந்தைக்கும் எதிராகச் செயல்படும்போதும் நம் உடலை பாவச் செயல்களில் ஈடுபடுத்தும்போதும் இந்த ஆலயங்களை சந்தையாக்குக்றோம்.


இயேசு சாட்டை எடுக்கும் முன், புதுப்பிப்போம். புதிய ஆலயமாவோம். பிறரையும் தூய ஆலயமாக்குவோம்!
உங்கள் அனைவருக்கும்  லாத்தரன் பேராலய அர்ச்சிப்பு விழா வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment