Tuesday 24 November 2015

வெற்றி உறுதி!

''நீங்கள் மன உறுதியோடு இருந்து
உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்'' (லூக்கா 21:19).

இயேசுவின் நாளைய  நற்செய்தி வார்த்தைகள், அவரைப் பின்தொடரக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய துன்பங்களாகச் சொல்லப்படுகிறது. இயேசுவைப் பின்தொடர்கிறவர்கள் இவ்வளவு துன்பங்களைச் சந்திக்க முடியுமா? தங்களது உயிரைக் கொடுக்க முடியுமா? இவ்வளவு வேதனைகளுக்கு நடுவிலும், அவர்கள் தங்களது விசுவாசத்தைக் காத்துக் கொள்ள முடியுமா? நமது மனித வாழ்க்கையில் இவையெல்லாம் சாத்தியக்கூறுகளா? இதுபோன்ற கேள்விகள் நிச்சயம் நமது வாழ்க்கையில் எழும்.


ஏனென்றால், இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்ற வார்த்தைகள் கேட்பதற்கே பயங்கரமாக இருக்கின்றன. ஆனால், இயேசுவின் வார்த்தைகள் உண்மையான வார்த்தைகள். அவை சாத்தியமே என்பதை வரலாறு கூறுகிறது.

தொடக்க கால கிறிஸ்தவர்கள் அவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டார்கள். அவர்களது உடல் விலங்குகளுக்கும், தீச்சுவாலைகளுக்கும் இரையாகப்போகிற சந்தர்ப்பத்திலும், கொடூரமான உடல் உபாதைகளால், காயப்படுத்தப்பட்ட போதிலும், அவர்கள் தங்கள் விசுவாசத்தை இழக்கவில்லை.

அதற்காக உயிரை விடுவதை, மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்கள். ஒரு மனித நிலையில், இது கடினமான ஒன்றுதான். ஆனால், துன்புறுத்தப்படுகிறபோது, நாம் மட்டும் துன்புறுத்தப்படுவதில்லை. கிறிஸ்துவும் நம்மோடு, நமக்காக, நம்மில் துன்புறுகிறார். நமது வேதனைகளைப் பகிர்ந்து கொள்கிறார். ஆக, தொடக்க கால கிறிஸ்தவர்கள், விசுவாசத்திற்காக உயிரைவிட்டவர்கள், இதனை முழுமையாக அனுபவித்திருந்தார்கள். எனவே தான், அவர்களால் மகிழ்ச்சியாக, கிறிஸ்துவுக்காக உயிர் விட முடிந்தது.

இன்றைய வாழ்வில், நாம் உயிர் விடத்தேவையான சூழ்நிலைகள் இல்லை. ஏனென்றால், தொடக்க கால கிறிஸ்தவ வாழ்வை ஒப்பிடும்போது, நமது வாழ்க்கைத்தரமும், சுதந்திரமும், மனித சமுதாய சகிப்புத்தன்மையும், பல மடங்கு உயர்ந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இன்றைய காலச்சூழலில், இயேசுவின் விழுமியங்களுக்கு நமது வாழ்வு மூலமாக, உதாரணமாக வாழ்வதுதான், சிறப்பான பங்களிப்பாக இருக்க முடியும்.

இந்நாட்களில் முழு மனித வாழ்கை வாழ்வதில் பல போராட்டங்களைச் சந்தித்து வருகிறோம். மனித நேயத்தோடு வாழ்ந்தால் பல இழப்புக்கள். நற்செய்தி விழுமியங்களை முதன்மைப்படுத்தி வாழ்ந்தால் ஏராளம் தொல்லைகள். ஒதுங்கி வாழ்ந்தாலும் வாழ முடியாது. பின் வாங்கவும் முடியாது, கூடாது.

இத்தகைய சூழல்களில் இன்றைய இறைவாக்கு ஆறுதலாக இருக்கிறது. "என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது". (லூக் 21'17-18) இறைவனை நம்பி வாழ்கிற மனிதனுக்கு துன்பங்கள் இழப்பகள் அதிகம்.

அவமானங்கள் ஏராளம். நான் யாரை நம்பியிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும் என்ற பவுலடியார் தன் வாழ்வி அடுக்கடுக்காக துன்பங்களை அனுபவித்தபோதும் துவண்ட விடவில்லை.

கிறிஸ்துவுக்காக வாழ்வதால் நம் பொருட்களுக்கு சேதம் உண்டாக்கலாம். பெயரை தூற்றலாம். உறவுகள் நம்மைப் புறக்கணிக்கலாம். சலுகைகளை இழக்கலாம். பதவி இல்லாமல் போகலாம். காவல் நிலையமும் நீதி மன்றமும் இழுக்கப்படலாம். குடும்பமே காட்டிக்கொடுக்கலாம். அஞ்ச வேண்டாம். கலங்க வேண்டாம். பயப்பட வேண்டாம். உங்களை வெல்ல எவராலும் இயலாது.

நமக்குத் தேவை மன உறுதி ஒன்றே. கடவுள் நம்பிக்கை மட்டுமே. அவர் நம் வாழ்வை காத்துக்கொள்வார். துணிந்து செயல்படுவோம். வெற்றி உறுதி.

No comments:

Post a Comment