Saturday 21 November 2015

நமது ஒரே அரசர் கிறிஸ்த்து - நாம் அவரின் குடிமக்கள்!

Happy Feast of  Christ The King
''இயேசு பிலாத்துவை நோக்கி, 'அரசன் என்று நீர் சொல்கிறீர்.
உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்;
இதற்காகவே உலகிற்கு வந்தேன்' என்றார்'' (யோவான் 18:37).

நாளை கிறிஸ்த்து அரசர் பெயரை தாங்கிய ஆலயங்களும்,கல்வி நிறுவனங்களும் நாமத் திருவிழாவை கொண்டாடுவார்கள்  அவர்கள் அனைவருக்கும் திருவிழா வாழ்த்துக்கள்.

 இதனை தொடர்ந்து கோவை மாவட்டம் காரமடையில் அமர்ந்து இருக்கும் கிறிஸ்த்து அரசர் பொறியியல் கல்லூரிக்கும், அங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கும்,ஆசிரியர் அனைவருக்கும் நாமத் திருவிழா வாழ்த்துக்கள்.

இக்கல்லூரி அமர்ந்து இருக்கும் இடம் அமைதியான சூழல்,தூய்மையான காற்று , பாசத்துடன் நடத்தும் அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள்  விடுதியை வீடு போல நினைத்து தங்கி இருக்கும் மாணவ,மாணவிகள் மற்றும் ஒவ்வொருவருக்கும் எனது ஜெபங்கள்.


நாளைய நற்செய்தியில் இயேசுவை நாம் அரசராகப் போற்றுகின்றோம். மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தி நூல்களில் இயேசு ''இறையாட்சி'' பற்றிய நற்செய்தி அறிவித்தது விளக்கப்படுகிறது. எனவே கடவுளின் பெயரால் ஓர் ''அரசாட்சியை'' நிறுவுவதை இயேசு தம் பணியாகக் கொண்டிருந்தார். அந்த ஆட்சியில் கடவுளே அரசராக இருப்பார். இயேசுவும் அந்த ஆட்சியில் பங்கேற்பார். யோவான் நற்செய்தியில் ''இறையாட்சி'' என்னும் கருத்து மைய இடம் பெறவில்லை.

மாறாக, இயேசு கடவுள் பற்றிய ''உண்மை''யை அறிவிப்பவராக, அதை வெளிப்படுத்துபவராக வருகின்றார். கடவுள் பற்றிய உண்மை யாது? கடவுள் நம் வாழ்வின் தொடக்கமும் நிறைவுமாக இருக்கின்றார் என்பதே அந்த உண்மை. கடவுள் நம்மை அன்புசெய்து, நமக்காகத் தம் திருமகனையே பலியாக்கினார் என்பதே அந்த உண்மை. கடவுள் நம் நல்ல ஆயராக இருந்து நம்மை அன்புடன் ஆண்டு நடத்துகிறார் என்பதே அந்த உண்மை.


இவ்வாறு கடவுள் பற்றிய உண்மையை நமக்கு எடுத்துரைத்த இயேசு அந்த உண்மையை யார்மீதும் திணிக்கவில்லை. பிலாத்துவின் முன்னிலையில் குற்றவாளி போல நிறுத்தப்பட்ட போதும் இயேசு தம்மை ஓர் அரசராக அடையாளம் காட்டி பிலாத்துவைக் கவரவில்லை. மாறாக அவர் விடுப்பது ஓர் இனிய அழைப்பு. அதை யார்யார் ஏற்கின்றார்களோ அவர்களே இயேசுவின் ஆட்சியில் பங்கேற்பவர்கள்.


 இயேசு இவ்வுலகில் வந்து பிறந்தது கடவுள் பற்றிய உண்மையை நமக்கு அறிவித்து, நாம் அந்த உண்மையை ஏற்றிட நமக்கு அழைப்பு விடுப்பதற்காகவே. இயேசுவின் அழைப்புக்குச் செவிசாய்க்கின்ற மனிதர்கள் அவருடைய ''மந்தை''யைச் சார்ந்தவர்கள். அவர்கள் சில வேளைகளில் வழிதவறிச் சென்றுவிட நேர்ந்தாலும் நல்ல ஆயராகிய இயேசு அவர்களைத் தேடிச் சென்று அழைத்து வருவார்.


இயேசு ஆற்றிய பணி நமது பணியாக மாறிட வேண்டும். நாமும் கடவுள் பற்றிய உண்மைக்குச் சான்று பகர அழைக்கப்படுகிறோம். அவ்வாறு சான்று பகர்கின்ற வேளையில் நமக்கும் துன்பங்கள் ஏற்படலாம். எதிர்ப்புகள் நம்மை எதிர்கொண்டு வரலாம். அந்த வேளைகளில் நாம் இயேசுவைப் போல நிலைத்து நிற்க வேண்டும்.


அவர் நமக்குத் தருகின்ற தூய ஆவியின் வல்லமையால் நாம் திடம் பெற்ற மனிதர்களாக ''உண்மைக்குச் சான்று பகர்ந்திட'' வேண்டும். உண்மையை முதலில் நம் உள்ளத்தில் ஏற்றால்தான் நாம் அதற்குச் சான்று பகர முடியும். அவ்வாறு ஏற்கும்போது நம் உள்ளத்தில் நிலவுகின்ற பாவம் என்னும் இருள் நம்மை விட்டு அகலும்.


 கடவுளின் அருள் என்னும் ஒளி நம் உள்ளத்தையும் இதயத்தையும் வாழ்வையும் நிரப்பும். அப்போது நாம் ஒளியின் மக்களாகத் திகழ்வோம். ''அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளியாக'' உலகுக்கு வந்த இயேசுவை நம் அரசராக நாம் ஏற்போம்; அவருக்கு உகந்த குடிமக்களாக வாழ்ந்திடுவோம்.

நம் இறைவன் காக்கும் தன் உயிர் கொடுத்து காக்கும் தெய்வம். உண்மை அரசர். அவரது அரசின் மக்களாயிருப்பது நமக்குப் பெருமை. அவரை போற்றி புகழ்ந்து நன்றி செலுத்தி வாழ்வோம். அவரது அரசில் வாழும் நமக்கு குறை இருக்காது.எல்லாம் நிறைவாக இருக்கும்.

உங்கள் அனைவருக்கும் கிறிஸ்து அரசர் பெருவிழா வாழ்த்துக்கள் !


No comments:

Post a Comment