Sunday 29 November 2015

மீன் பிடித்தல் !

என் ஊர்  ராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி பக்கத்தில் உள்ள திருவெற்றியூர்.இங்கு நெறைய இந்து சகோதரர்கள் தான் அதிகம்.இங்கு இருக்கும் பாகம்பிரியாள்  கோவில் பழம் பெரும்   புகழ் பெற்றது.ஊரில் கண்மாயும் உண்டு  ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டரே கடலுக்கு, ஆக கடலும் உண்டு.

சரி அது என் மேட்டர் இல்லை.பின்னே எது என் மேட்டர்.இப்போ நான் மேட்டருக்கு வரேன்.

எனக்கு மீன் பிடித்தல் என்பது ரொம்ப பிடிக்கும். நான் சிறுமியாக இருக்கும் போது மழை பெய்து கண்மாய் நிறைய தண்ணீர் இருக்கும் போது நானும்  தூண்டில் எடுத்துக் கொண்டு மீன் பிடிக்க செல்வது வழக்கம்.என் அப்பா சொல்வார்கள் ஏன் செல்வி வேண்டாத வேலை என்று.இருந்தாலும் மண்புழுவை மாட்டி நிறைய மீன் பிடித்திருக்கிறேன்.என் கூட வருபவர்களுக்கும் சேர்த்து பிடிப்பேன்.

விடுமுறை நாள்கள் வந்தாலே இது தான் வழக்கம்.இதெல்லாம் நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.மகிழ்ச்சி என்பது  நாம் சிறுவர்களாய் இருக்கும் போது அடிக்கடி அனுபவித்த ஒன்று.பிறகு வீட்டிற்கு மீனோடு வந்தால் அம்மா சொல்வார்கள் வீட்டில் நீ செய்யும் ஒரே வேலை அதுவும் கண்மாய் நிறைந்தால் இது மட்டும் தான் என்று திட்டாமல் செல்லமா சொல்லி சமாளிப்பார்கள்.ஏனென்றால்,அம்மாவுக்கு இன்றைக்கு வரைக்கும் நான் வேலையின் பெயரில் உதவியதே  கிடையாது.

நாம் மேல்நோக்கி கடந்து போயிருந்தாலும் கடந்து வந்த பாதையை ஒருகாலும் மறக்க கூடாது.

திருத்தூதரான புனித அந்திரேயாவின் விழாவை நாளை நாம் கொண்டாடுகிறோம். இவர் பேதுரு சீமோனின் சகோதரர்.  மீன் பிடிப்பவர். இவரை இயேசு சந்தித்து என் பின்னே வாருங்கள். உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் என்று அழைத்தார். அந்த அழைப்பை அந்திரேயா உடனே ஏற்றுக்கொண்டார். தன் சகோதரர் பேதுருவுடன் இணைந்து வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார். இயேசுவும் அவரைத் திருத்தூதராக்கி, இறையாட்சிக்காக மனிதரைப் பிடிக்கும் மீனவராக மாற்றினார்.

முப்பது ஆண்டு காலம் தனது பெற்றோருடன் மகிழ்ச்சியாக, கீழ்ப்படிதலோடு வாழ்ந்த இயேசு தனது பணிவாழ்வைத் தொடங்குகிறார். சாதாரண மக்களில் ஒருவராக வாழ்ந்த இயேசு, இனி தன்னை அடையாளப்படுத்தக் கொள்ள வேண்டிய நேரம் வந்ததும், அதற்கு தன்னையே தயார்படுத்துகிறார்.

இதுவரை அவரது வாழ்க்கையில், கவலை ஒன்றும் இல்லை. தனது தாயோடு, தாய்க்கு நல்ல மகனாக, வாழ்வின் இனிமையை உணர்ந்து, பூரிப்போடு இருக்கிறார். வாழ்க்கை இப்படிப்போனால், அது நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால், இயேசு அதற்காக வரவில்லை. அதையும் தாண்டிச்செல்லக்கூடிய பயணம் தான் அவரது வாழ்க்கை. அதற்காகத்தான் அவர் வந்திருக்கிறார்.

தனது நேரம் வருமளவும் பொறுமையோடு, பணிவோடு காத்திருக்கிறர். நேரம் வந்ததும், அதற்கான முழுவீச்சில் தனது பணியை ஆரம்பிக்கிறார். முப்பது ஆண்டுகள் தனது குடும்பத்தோடு வாழ்கிறபோது, அதை மகிழ்வோடு நிறைவோடு வாழ்கிறார். மூன்று ஆண்டு காலம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, வாழ்ந்தபோதும் மகிழ்ச்சியாக வாழ்கிறார். ஆக, எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும், மகிழ்வோடு வாழ்கிறார்.

இன்றைய நமது வாழ்க்கை எதிலும் நிறைவில்லாமல் இருக்கிறது.  கன்னியர் மடத்தில்,  குருமடத்தில் இருக்கிறபோது, எப்போது கன்னியர் ஆவோம்,அருட்பணியாளராக மாறுவோம் என்ற ஆசை இருக்கிறது. கன்னியராகஅருட்பணியாளராக மாறியவுடன், எப்போது   மடத்தலைவி, பங்குத்தந்தையாக  மாறுவோம் என்று எண்ண ஆரம்பிக்கிறோம். மடத்தலைவி,பங்குத்தந்தையாக மாறியவுடன், கன்னியர் மடம் ,குருமட வாழ்வை நினைத்துப் பார்த்து பெருமூச்சு விடுகிறோம். இல்லாத வாய்ப்பிற்காகப் போராடுகிறோம். வாய்ப்பு வருகிறபோது, தவறவிடுகிறோம். இதை தொடர்கதையாக மாற்றாமல், முழுமையாக, நிறைவாக, நமது வாழ்வை வாழப்பழகுவோம்.

இந்த நாளில் புனித அந்திரேயாவின் மாதிரியை நாமும் பின்பற்றுவோம். அழைப்பைக் கேட்டதும் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள் என்ற வரிகள் அவர்களின் செவிமடுத்தலின் தன்மையை விளக்குகின்றன.

 இயேசுவின் சீடர்களாக மாற விரும்பினால்,வாழ விரும்பினால்   தேவையற்றவைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்ற வேண்டும்.

 நம் வாழ்வின் வலைகள் என்ன என்பதைக் கண்டு, அவற்றை விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றுவோம்.

உங்கள் அனைவருக்கும்  திருத்தூதரான புனித அந்திரேயாவின் திருவிழா வாழ்த்துக்கள்!


No comments:

Post a Comment