Thursday 5 November 2015

அடித்தளம் !

கிறிஸ்துவின் பெயரைக் கேள்விப்படாத இடங்களில் மட்டும் நற்செய்தி அறிவிப்பதே என் நோக்கமாய் இருந்தது. ஏனெனில் வேறொருவர் இட்ட அடித்தளத்தின்மேல் கட்டி எழுப்ப நான் விரும்பவில்லை. ஆனால், ``தங்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப் படாததை அவர்கள் புரிந்துகொள்வர்.'' உரோமை(15:21).

நாளை  மிக அருமையான முதல் வாசகம்.தூய பவுல் ரோமையருக்கு எழுதிய மடலில் எது நம் வாழ்வு அல்லது நம் பணி இவைகளின் அடித்தளமாக இருக்க வேண்டும் என்பதை தெளிவாக கூறியிருக்கிறார்.

நேற்று நான்  பிரான்சிஸ் சபை இல்லத்தின் ஜுபிலி திருப்பலிக்காக சென்றிருந்தேன்.அங்கு அந்த சபையில் மலையாளி சகோதரிகள் மட்டுமே காண முடிந்தது.அப்போதுதான் எங்கோ யார் சொல்லியோ கேள்விப்பட்ட ஞாபகம் வந்தது பொதுவாக கேரளா சபைகளில் வேற மொழிக்காரர்களை எடுக்க மாட்டார்கள் என்று.

நேற்று கலந்து கொண்ட திருப்பலி சிறியோன் மலபார் ரைட்.எனக்கு கொஞ்சம் கொஞ்சம் மலையாளம் தெரியும்.ஆனால் திருப்பலி நடந்தது தமிழில் சிறியோன் மலபார் முறைப்படி .  

அந்த சகோதரிகள் வாழ்வது தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் வாழும் பகுதி.
அவர்கள் பணி செய்யும் விதமே தனி.அவர்கள் சபையின் சட்ட திட்டங்கள் படி அவர்கள் அசைவம் சாப்பிடுவது கிடையாது.நான் தமிழ்நாட்டு அருட்சகோதரியாக இருந்தாலும் அவர்கள் என்னை புன்முறுவலுடன் வரவேற்று நன்கு கவனித்தார்கள் .

அவர்கள் கேரளாவில் இருந்து வந்து கோயம்புத்தூரில்  காரமடைக்கு அருகில் உள்ள தொட்டிபாலயத்தில் மிகவும் சீரும் சிறப்புமாக தூய பவுலை போன்று நற்செய்தி அறிவிக்கும் பணியை நம் தமிழ் மக்களுக்காக செய்கிறார்கள்.

இவர்கள் அதுமட்டுமல்ல  தாழ்த்தப்பட்ட பெண்களின் மறுவாழ்வு மற்றும் குழந்தைகளின் மறுவாழ்வு போன்ற பணிகளையும் செய்கிறார்கள்.  

நாம் கேரளாவில் போய் நற்செய்தி உரைப்பது என்பது மிக கடினம். ஆனால் பாருங்கள் எவ்வளவு அருமையாக அந்த சகோதரிகள் நம் மக்களை கிறிஸ்துவின் பால் ஈர்க்கிறார்கள் என்று.

அவர்களை பாராட்டிவிட்டு காண்வெண்டிர்க்கு வரும் வழியில் தானே தூய பவுலின் நற்செய்திப்பணி ஞாபகத்திற்கு வந்தது அவைகளை எல்லாம் அசை போட்டுக்கொண்டே  வந்தேன்.  

அதை வைத்து நாளைய முதல் வாசகத்தை  பார்த்தால் தூய பவுல் "வேறொருவர் இட்ட அடித்தளத்தின்மேல் கட்டி எழுப்ப நான் விரும்பவில்லை"  என்று ஆணித்தரமாக உரைக்கிறார்.


வேறொருவர் இட்ட  அடித்தளம் மூலம்  தூய பவுல் கூறுவது ஒருவரை புதிதாக கிறிஸ்துவுக்குள் எப்படி கொண்டு வருவது என்பதை குறித்து காட்டுகிறார்.அதை அவரே முறைப்படி கொண்டு வரவும் விரும்புகிறார்.
இன்று பார்த்தோம் என்றால் பிரிவினை சகோதரர்கள் நம் அடித்தளத்தில்  கைவைப்பதிலேயே குறியாக  இருக்கிறார்கள். இவைகளை முறியடிக்க வேண்டும் என்றால் நாம் விசுவாசத்தில் நிலை கொண்டு வாழ வேண்டும். 

  மேலும் முதல் வாசகத்தில் தூய பவுலின் நோக்கம் கிறிஸ்துவின் பெயரை கேள்விப்படாத இடங்களில் மட்டும்   அறிவிப்பதாக உள்ளது என்றும் கூறுகிறார். இதைத்தான்  அந்த சகோதரிகளும் செய்திருப்பார்கள் என்று நம்புகிறேன். 

நாம் சில நேரங்களில் கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவதையே தெரிந்து வைத்திருக்கிறோம்.மேலும்  நமக்கென்று  ஒரு தனி உலகத்தை வைத்திருக்கிறோம்.அதில் கிறிஸ்து வாழ்கிறாரா என்பது  நம்மிடம் இன்னும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.   

ஆகவே , இறைவார்த்தையை கொண்டு நம் வாழ்வை அடித்தளமாக்குவோம்.இறைவார்த்தைகள்  வெறும் வார்த்தையல்ல. வாழ்வியல் தத்துவம் என்பதை புரிந்து கொள்ளுவோம். 

அந்த தத்துவத்தைப் புரிந்து கொண்டால்,நம் அடித்தளமும் கிறிஸ்துவில் ஆழமானதாக இருக்கிறது என்பதை உணரலாம். ஆக , நமது வாழ்வு நிச்சயம் மகிழ்ச்சியானதாக இருக்கும். 

கிறிஸ்துவில் இடுவோம் அடித்தளத்தை ஆழமானதாக. 
      




1 comment:

  1. dear akka today's thoughts was very good and practical life skills.it is appreciable for your observation lesson from others.after I read this thoughts I will try to learn good things from others rather finding fault to others.

    ReplyDelete