Sunday 22 November 2015

வாழ்வாதாரம்!

''இயேசு...வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளைக்
காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார்'' (லூக்கா 21:2).

நாம் கடவுளுக்கு என்ன கொடுக்கிறோம் என்று கேட்பதை விட, நாம் அவருக்குக் கொடுத்தபிறகு எதை நமக்கென்று வைத்துக்கொள்கிறோம் என்னும் கேள்வியைக் கேட்பது அதிகப் பொருத்தமாக இருக்கும். செல்வம் மிகுந்தோர் கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுத்தபிறகு இன்னும் பெரிய செல்வம் கொண்டிருப்பார்கள்.

தன்னிடம் இருப்பது அனைத்தையும் கடவுளுக்குக் காணிக்கையாக்கிய பிறகு தன்னிடம் ஒன்றும் இல்லை என்றதான் அக்கைம்பெண் உணர்ந்திருக்கவேண்டும். அதே நேரத்தில், தன்னை வெறுமையாக்கிய பிறகு அப்பெண் தன் வாழ்வு நிறைவுபெற்றதை உணர்கிறார். எவ்வளவு அன்போடு நாம் கொடுக்கிறோமோ அவ்வளவு அதிகமாக நமக்குக் கடவுள் தம் அருளை வழங்குவார். பொருளை விரும்புபவரல்ல நம் கடவுள்; நம்மையே நாம் அவருக்குக் கையளிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம்.


இயேசு கொடுக்கும் முக்கியத்துவம் எப்பொழுதுமே பொன்னுக்கோ பொருளுக்கோ அல்ல. மனிதனுக்கே முதலிடம், முக்கியத்துவம். "ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை." "பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" (மத் 9 :13) இதே கொள்கைதான் கெட்டவற்றுக்கும். பாவத்தை அல்ல, பாவியை பெரிதாக கருதுபவர். எடுத்துக்காட்டு, ஊதாரி மைந்தன் உவமை, விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்.

இவ்வாறு மனிதனையும் அவனது மனநிலையையும் முதன்மைப்படுத்துவதால் அவர்களிடமிருந்து வெளிப்படும் செயல்களின் எதார்த்தமும் வெளிப்படுகிறது. தியாகம்,காணிக்கை, பிறருக்குக் கொடுத்தல் இவற்றின் உட்பொருள், உள் நோக்கம் இவற்றை உணரமுடிகிறது. தன்னில் ஒரு தாக்கத்தை, இழப்பை ஏற்படுத்தாத எச்செயலையும் தியாகம், காணிக்கை என்று கணிக்கமுடியாது.

ஏழைக் கைம்பெண் தன் வறுமையில் இருந்த அனைத்தையும் போட்டாள். இது தியாகம்.பணக்காரன் பல கோடியில் பல லட்ஷத்தில் பலரும் பாராட்டும் மண்டபம் கட்டுவதில் என்ன தியாகம் இருக்கிறது என்பது, இயேசுவின் பாராட்டில் புதைந்திருக்கும் பூதாகாரமான கேள்வி. இந்த கேள்வியின் பதிலே சம தர்ம சமூகத்தின் வாழ்வாதாரம். இதுவே இயேசு விரும்பும் காணிக்கை, தியாகம்.

1 comment: