Wednesday 25 November 2015

தலை நிமிர்ந்து நில்லுங்கள்

''இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்;
ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது'' (லூக்கா 21:28).


மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய ''ஒத்தமை நற்செய்திநூல்களில்'' எருசலேமின் அழிவு முன்னறிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் உலக முடிவும் விவரிக்கப்படுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒன்றோடொன்று கலந்த விதத்தில் நற்செய்தி நூல்களில் உள்ளன (காண்க: லூக் 21:20-28). எருசலேம் நகரம் உரோமைப் படையினரால் அழிக்கப்பட்டபோது (கி.பி. 70) அங்கு வாழ்ந்த மக்கள் ஆயிரக் கணக்கில் இறந்தனர்; எஞ்சியோர் பெருந்துன்பங்களுக்கு ஆளாயினர்.


அந்நிகழ்வுகளின் பின்னணியில் உலக முடிவும் விவரிக்கப்படுகிறது. வான மண்டலத்தில் அடையாளங்கள் தெரியும், கடல் கொந்தளிப்பு ஏற்படும்; மக்கள் தங்களுக்கு ஏற்படப் போகின்ற அழிவு குறித்து அஞ்சி நடுங்குவர் என்று இயேசு எச்சரிக்கிறார். ஆனால் இந்த அச்சுறுத்தும் அடையாளங்களின் நடுவே ஆறுதல் தரும் வார்த்தையும் உரைக்கப்படுகிறது. அதாவது, மானிட மகன் மாட்சியோடு வருவார்; மனிதரின் மீட்பு நிறைவுறும்.


 மனிதர்கள் அச்சத்தால் நடுங்குகின்ற வேளையில் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஆறுதல் செய்தி இது: ''நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்'' (லூக் 21:28). இவ்வாறு தலைநிமிர்ந்து நிற்பதற்கு அடிப்படையான காரணம் ''நமது மீட்பு நெருங்கி வருவது''தான். இயேசு கூறிய இவ்வார்த்தைகளின் பொருள் என்ன? பண்டைக் காலத்தில் இஸ்ரயேலர் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது கடவுள் அவர்களுடைய ஏக்கமிகு மன்றாட்டுக்குச் செவிமடுத்தார்.


தம் மக்களின் வேதனையைப் போக்கிட அவர் முன்வந்தார். எனவே, இஸ்ரயேல் மக்கள் ''இடையில் கச்சை கட்டி'', ''கால்களில் காலணி அணிந்து'', ''கையில் கோல்பிடித்து'' பாஸ்கா உணவை உண்ணவேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர் (காண்க: விப 12:11). இவ்வாறு, பயணம் போகத் தயாரான நிலையில் அவர்கள் இருந்தார்கள். கடவுளின் வல்லமையால் அவர்கள் விடுதலையும் மீட்பும் அடைந்தார்கள். இயேசுவும் இந்த உருவகத்தைப் பயன்படுத்துகிறார்.


உலகம் என்று முடிவுக்கு வரும் எனத் தெரியா நிலையிலும் நாம் எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்க இயேசு நம்மை நோக்கித் ''தலைநிமிர்ந்து நில்லுங்கள்'' எனக் கேட்கின்றார் (லூக் 21:28). நமக்குக் கடவுள் வழங்குகின்ற மீட்பு நம்மை நெருங்கி வந்துவிட்டது என்னும் நல்ல செய்தி நமக்கு மகிழ்ச்சி தர வேண்டும்.

 உலக அழிவு பற்றி அச்சமுறாமல் நாம் ''தலைநிமிர்ந்து நின்று'', நம் கடவுளிடமிருந்து வருகின்ற மீட்பை நன்றியோடு ஏற்றிட அழைக்கப்படுகிறோம்.

No comments:

Post a Comment